Sunday, December 31, 2006

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வலைப்பக்கத்திற்க்கு வருகை தரும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். உங்கள் அனைத்து லட்சியங்களும் நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

WISH YOU A HAPPY NEW YEAR - 2007

Thursday, December 21, 2006

ஹாலிடே டைம்!! ஜஸ்ட் ரிலாக்ஸ்

கிறிஸ்துமஸ் அப்புறம் புதுவருச லீவெல்லாம் வருது. ஹாயா வீட்டில இருப்பீங்க!! ஷாப்பிங் லிஸ்ட் பட்ஜட்டை தாண்டி கன்னா பின்னான்னு எகிறியிருக்கும். (பில் எல்லாம் ஜனவரியில வரும், அது வேற கதை)ஜஸ்ட் ரிலாக்ஸ்!! ஒரு ஸ்மால் டிரிங் (கட்டிங் தாங்க).இதை டிரை பண்ணி பாருங்க.

THE HAPPY SCOTSMAN
50 ml. Black Label Scotch Whisky (விஸ்கி)15 ml.
Lemon Juice (எலுமிச்சம் சாறு)60 ml.
Lukewarm Water (மெல்லிய சூடாக தண்ணீர்)
2 tbsp Honey (தேன்)

எல்லாத்தையும் நல்லா கலந்து அதோட கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்க...............ஜஸ்ட் ரிலாக்ஸ், அப்புறம் சொல்லுங்க!!

இன்னொரு மிக்ஸ்

GIN SPRIT50 ml. Dry Gin (ஜின்)50 ml.
Pomegranate Juice (மாதுளம் சாறு)
15 ml. Orange Juice (ஆரஞ்சு சாறு)
1 tsp Sugar (சீனி)

இது சும்மா உங்களை ஜிவ்வுனு மேலே கொண்டு போகும்.
இரண்டு மிக்ஸையும் ஒரே நேரத்தில குடிச்சிடாதீங்க. அவ்வளவுதான், எகிறீடும்!!! இன்னும் நிறைய மிக்ஸ் இருக்கு தேவைன்னா சொல்லுங்க!

இந்த மிக்ஸ டிரை பண்றவங்களுக்கு ஒரு சின்ன (பெரிய) வேண்டுகோள் குடிச்சிட்டு வண்டி ஓட்டாதீங்க.

எச்சரிக்கை: குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடலைக் கெடுக்கும்.(அப்புறம் மருத்துவர் ஐயா இங்க வந்து தகறாரு பண்ணப்போறாரு)

Thursday, December 14, 2006

சன் டிவியா? திருட்டு விசிடியா?

தியேட்டரில் புதிய தமிழ் திரைப்படம் நன்றாக ஓடாததற்கு, மோசமான திரைக்கதை, இயக்கம், நடிப்பு, சூழ்நிலை என நிறைய காரணங்கள் படத்துக்கு உள்ளேயே இருக்கலாம்.

ஆனால் ஒரு படம் சரியாக வசூலை தராததற்கு காரணம் திருட்டு விசிடி, மோசமான தியேட்டர், சிலவேளைகளில் அரசியல் கூட காரணமாக இருக்கலாம். இதில் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துவது திருட்டு விசிடி என்றே நம்பப்படுகிறது. உண்மையும் அதுதான். ஆனால் எனக்கென்னவோ இதில் நாம் ஒன்றை விட்டுவிட்டோம் என்றே தோன்றுகிறது.

அது சன் டிவியின் திரை விமர்சனம்.

சன் டிவியில் திரை விமர்சனம் பார்த்தால் நீங்கள் தியேட்டருக்கு போகத்தேவையில்லை. தியேட்டருக்கு என்ன திருட்டு விசிடியில் கூட பார்க்கத் தேவையில்லை!

ஒரு படத்திற்கு விளம்பரம் தேவைதான். சில பாடல் காட்சிகள், ரசிகர்களின் ஆவலை தூண்டும் விதத்தில் சில காட்சிகள் என சிலவற்றை டிவியில் காட்டலாம். அதற்காக படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் காட்டிவிட்டு தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை என்று திருட்டு விசிடியை குறை சொன்னால் எப்படி? அதைவிட மோசம் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் படத்தை விமர்சிக்கிறேன் என்கிற சாக்கில் படத்தின் இறுதி முடிவையும் சொல்லிவிடுகிறார்.(வணக்கம் ஸ்லைட் தவிர்த்து)நானே சில சமயங்களில் சன் டிவியில் திரை விமர்சனம் பார்த்தபிறகு தியேட்டருக்கு அந்த படத்தை பார்க்கப்போவதை தவிர்த்திருக்கிறேன், அதுவும் கனடாவில்.

இதை தயாரிப்பாளர்கள் உணர்வதில்லையா? அல்லது திரை விமர்சனம் என்றால் முழுப்படத்தையும்!! ஒளிபரப்ப வேண்டும் என்பது சன் டிவியின் விதி முறையா?

இது போன்ற காரணங்களால் "பிதாமகன்" படத்தை டைரக்டர் பாலா சன் டிவிக்கு கொடுக்க மறுத்ததாக ஒரு தகவல் உண்டு. (சன் டிவி ரேட்டிங்கில் "பிதாமகன்" கீழே இருந்தது வேறு கதை).

தியேட்டரில் கூட்டம் குறைவதற்க்கு விசிடி மட்டுமல்ல சன் டிவியும் ஒரு காரணம்தான்.

தமிழ் சேனல்களில் சன் டிவி மட்டுமே இங்கு ஒளிபரப்பாகிறது. அதனால் சன் டிவியின் திரைவிமர்சனத்தை பற்றி மட்டுமே எழுதியிருக்கிறேன்.

Wednesday, December 13, 2006

ஆபத்திற்க்கு உதவினால் போலீஸ் தொல்லை!!

நான் சிறீலங்காவில் வசிக்கும் காலத்தில் ஒரு முறை கொழும்பிலிருந்து சென்னைக்குப் போயிருந்தேன். நானும் எனது நண்பரொருவரும் (நண்பர் சென்னையைச் சேர்ந்தவர்) காஞ்சிபுரம் போய் பெரியவரை தரிசித்துவிட்டு அப்படியே அங்குள்ள கோயில்களுக்கும் போய் வர திட்டமிட்டோம். அப்பொழுது எனது நண்பர் "நாம் காரில் போக வேண்டாம், ஆட்டோவில் போவோம் சற்று வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்" என்று சொன்னார் (எக்மோரிலிருந்து காஞ்சிபுரம் வரை). நானும் சரி என்று சொல்ல மறுநாள் காலையிலேயே கிளம்பி விட்டோம்.

பாதி தூரத்திற்கு மேல் சென்றதும் வழியில் ஒரு பஸ் ஓரமாக நிறுத்தப் பட்டிருந்தது. பஸ்ஸை சுற்றி ஒரே கூட்டம். என்னவென்று பார்த்தால் ஒரு வயதான பெண்மணி (60 வயதிருக்கும்) ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்கவோ, ஏறவோ முயற்சி செய்யும் பொழுது கீழே விழுந்து பஸ்ஸின் சக்கரங்கள் இரண்டு காலிலும் ஏறிவிட்டது. முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களும் சிதைந்து போயிருந்தது.
அந்தப்பெண்மணி வலி தாங்காமல் அய்யோ,அய்யோ என்று தரையிலிருந்து கதறிக்கொண்டிருந்தார். சுற்றி நின்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் உதவி செய்யவோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவோ முயலவில்லை. பஸ்ஸின் ஓட்டுனரையும், நடத்துனரையும் காணவில்லை.

யுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டிலிருந்துசென்ற எனக்கே திகீரென்று ஆகிவிட்டது. கூட்டத்தில் ஒருவர் " இது பொலிஸ் கேஸ் யாரும் தொடாதீர்கள்" என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கோ அந்தப் பெண்மணி படும் வேதனையை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நான் எனது நண்பரிடம் " வாருங்கள் நாம் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து விடுவோம் என்று கூறினேன். நண்பர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சரசரவென கூட்டத்திற்கு வெளியே இழுத்துச்சென்றார். "டேய் சும்மாயிரு, ஒனக்கு இங்க விபரம் போதாது. ஹாஸ்பிட்டலுக்குப் போனா போலீஸுக்கு சொல்லுவாங்க. போலீஸ் எல்லாரையும் கிண்டி கொடஞ்சிருவாங்க. அப்பறம் சாட்சி, கோர்ட், கேஸ்னு திரிய வேண்டியதுதான். அதவிட நீ சிறீலங்காவில இருந்து வந்து இருக்கிற, போலீஸ் உன்ன விடுதலைப்புலின்னு கொண்டு போயிருவான். உன்னோட சேர்த்து என்னையும் உனக்கு உதவி செய்ததா கொண்டு போயிருவான். அப்புறம் நீ சிறீலங்காவுக்கு மட்டுமல்ல இங்க ஜெயில விட்டே போக முடியாது" என்றார்.

அவரோடு சேர்ந்து கொண்டு ஆட்டோகாராரும் " ஆமா சார், விடுதலைப்புலிகளுக்கு உதவி பண்ணினேன்னு என்னையும் கொண்டு போயிருவாங்க, ஆட்டோவையும் பறிச்சுருவாங்க. வேண்டாம் சார் வாங்க போகலாம் " என்றார்.

அதற்கு நான் சொன்னேன் " அப்ப நான் இங்கேயே இருக்கிறேன், நீங்க இரண்டு பேரும் ஹாஸ்பிட்டலுக்கு போங்க" என்றதும், எனது நண்பர் " டேய் நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? போலீஸுக்கு போனா நான்தான் பஸ்ஸ அந்த அம்மா மேல ஏத்தின மாதிரி கேள்வி கேட்பாங்க, எனக்கு இது தேவையா" என்றார். ஆட்டோகாரரும் அதை ஆமோதித்தார்.
நான் "அப்ப அந்த அம்மாவின் நிலை" என்றதும் "அந்த அம்மாவின் தலையெழுத்துப்படி நடக்கும்" என்றார் ஆட்டோக்காரர்.

இதில் மோசமாக மனதைப் பாதித்த விடயம் என்னவென்றால் கூட்டத்திலேயே இன்னொருவர் "இந்த கெழவி பொழைக்காது" என்று அந்த பெண்மணி முன்னாலேயே கூறியதுதான்.

நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் இருவரும் என்னை விடவில்லை. அதன் பிறகு கோயிலுக்கு, மடத்திற்க்கு எல்லாம் சென்றும் எனது மனம் ஆறவில்லை. திரும்பி வரும் வழியில் ஆட்டோகாரர் அந்த இடத்தில் நிறுத்தி விசாரித்தார். பொலிஸார் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அந்த பெண்மணிக்கு நினைவு இருந்ததாகவும் அங்குள்ளோர் கூறினார்கள்.

வெகுகாலம் அந்த சம்பவம் என் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

உதவி செய்ய வேண்டுமென்ற மனப்பான்மை எலலோருக்குமே இருக்கிறது. ஆனால் போலீஸாரின் கெடுபிடிகளுக்கு பயந்து யாரும் உதவ முன் வருவதில்லை.

பொதுமக்களுக்கு உதவுவதற்காகத்தான் போலீஸ். அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் இவர்கள் ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஒருவர் உதவுவதற்க்கு தடையாக இருக்கக்கூடாது. யுத்த பூமியாக இருந்தாலும் சிறீலங்காவில் இப்படிக் கிடையாது. உதவுபவர்களை பொலிஸார் தொந்தரவு செய்வது இல்லை. (இப்பொழுது எப்படியோ தெரியாது)
இதில் வேடிக்கையான விடயம், நான் விடுதலைப்புலியல்ல. சிறீலங்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழித் தமிழன். எனது அப்பா, பாட்டா, தாத்தா எல்லோரும் இந்தியாவில் பிறந்தவர்கள். ஆனால் போலீஸாரைப் பொறுத்தவரை சிறீலங்காவில் பிறந்த எல்லோருமே விடுதலைப்புலிகள் தான்.

போலீஸாசார் தங்கள் போக்கை மாற்றாதவரை "காவல் துறை உங்கள் நண்பன்" என்பது வெறும் வாசகம்தான்.

மீண்டும் சோதனைப் பதிவு!!

பதிவை தமிழ்மணத்தில் சேர்ப்பது சிக்கலாத்தான் இருக்கு. அதுதான் ஒரு சோதனைப் பதிவு!!

Sunday, December 10, 2006

சன் செய்திகள்!

சன் செய்திகள்! என்றதும் ஏதோ செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் என்று பார்த்தீர்களா? இல்லை, இது சன் செய்திகளின் செய்தி வாசிப்பவர்களைப் பற்றியது.

அது ஏன் மலச்சிக்கலுடன் செய்தி வாசிக்க வந்தவர்கள் போல் முகத்தை வைத்துக் கொள்கிறார்கள்? ஆண்கள்/பெண்கள் எல்லோருமே அடித்தொண்டையில் செய்தி வாசிக்கிறார்கள் . அது ஏன் என்று புரியவில்லை.
பார்க்கும் பொழுது பாவமாக இருக்கிறது.

செய்திகள் வாசிக்கும் போது முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அடித்தொண்டையில் வாசிக்க வேண்டும் என்று (சன்) விதிமுறை ஏதும் உள்ளதா?

சற்றே சிரித்த முகத்துடன் (செய்திகளுக்கு ஏற்ப) இறுக்கமில்லாத குரலில் வாசிக்கலாம்.

BBC, CNN, CBC சேனல்கள் நல்ல உதாரணம்.

பார்க்கலாம் எதிர் காலத்தில் மாறுகிறார்களா என்று?

Tuesday, December 5, 2006

பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் வருகின்றது!


இலங்கையில் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவர இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக தகவல். அத்துடன் விடுதலைப்புலிகளை தடைசெய்யவும் உத்தேசம்!

எதை நோக்கி நகர்கிறது இலங்கை அரசு!!?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் விடுதலைப்புலிகளை அழித்து விடலாம் என்றால் முன்னர் தடைச்சட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில்தான் தென்னிலங்கை மிக மோசமான அழிவைச்சந்தித்தது. சமாதானத்தை நோக்கிய காலங்களின் போதுதான் இலங்கை அரசு சற்றே நிம்மதியாக மூச்சு விட்டது.

புலிகளைத்தடை செய்வது சரியா, பிழையா என்பதல்ல பிரச்சினை, தடை செய்வதன் மூலம் சமாதானத்தை விட்டு விலகிச்செல்கிறோம் என்பது தான் உண்மை.

உலகில் இன்றுவரை எந்த ஒரு ஆயுதமேந்திய போராட்டமும் எந்த ஒரு மக்களுக்கும் விடுதலை பெற்றுத் தந்ததாக சரித்திரம் இல்லை. அதே போல் எந்த ஒரு இனத்தையும் தடைச்சட்டங்களின் மூலம் அடக்கிவிடலாம் என்பதும் கனவாகவே முடியும்.

பேச்சுவார்த்தை / சமாதானம் மூலமாகவே ஒரு தேசத்தை அல்லது இனங்களுக்கிடையிலான
ஒற்றுமையை கட்டி எழுப்ப முடியும்.

மனித உரிமைகள் மிகவும் பாரதூரமாக மீறப்பட்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் சமாதானம் நிலவ அரசாங்கமே அதிக அக்கறை காட்டவேண்டும். அரசின் எந்த ஒரு நகர்வும் சமாதானத்தை நோக்கியதாகவே இருக்க வேண்டும்.

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய ஒரு கடமை புலிகளுக்கு கிடையாது. அதற்காக நன்கு ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு அரசாங்கத்திற்கு ஈடாக வளர்ந்திருக்க்கும் புலிகள், அரசிற்க்கு எதிரான தனது போராட்டத்தில் மக்களை பலிகடாவாக்கக் கூடாது. காரணம் இந்தப் போராட்டமே ம்க்களுக்காகத்தான்.

பேச்சு வார்தையின் மூலமே ஒரு தீர்வை எட்டமுடியும் என்பதில் இரு தரப்பினரும் நம்பிக்கை வைக்க வேண்டும். புலிகளுக்கும் அரசிற்க்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு மிக அவசியம். ஆனால் அது துளியளவு கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை.

புலிகள் மட்டுமே வடக்கு, கிழக்கு தமிழர்களின் பிரதிநிதிகள் இல்லை என்று கூறும் மற்றைய இயக்கங்கள் / கட்சிகள் கூட, அல்லல்படும் தமிழர்க்கு உதவுவதைவிட புலிகளை வஞ்சம் தீர்ப்பதே தமது தலையாய கடமை என செயல்படுகின்றன.

அரசாங்கமும் தனது முந்தைய அனுபவங்களில் இருந்து எந்த ஒரு பாடமும் கற்றதாக தெரியவில்லை. ஆனால் எந்த ஒரு சராசரி சிங்களவரும் யுத்தத்தை விரும்பவில்லை.

புலிகளை தடை செய்வது மீண்டும் ஒரு மோசமான யுத்தத்திற்கே வழி வகுக்கும். அதன் மூலம் மீண்டும் முழு நாடும் யுத்தத்திற்குள் தள்ளப்படும் நிலை ஏற்படும்.


அமெரிக்க டாலர் 5.469 பில்லியன் வரவு செலவு திட்டத்தில் $ 1.665 பில்லியன் பற்றாக்குறை(2005) நிலவும்போது இந்த வருடம் $ 1.300 பில்லியன் தொகையை பாதுகாப்பு நிதிக்கு ஒதுக்கியிருப்பது கவலைக்குரியது.

மொத்த சனத்தொகையில் 92.3 % பேர் கல்வியறிவு பெற்ற இத்தேசத்தில் இப்படியோர் நிலைமை.

85,000 பேருக்கு மேல் உயிரிழந்தும், லட்சக்கணக்கானோர் அகதிகளாகவும், ஆறு லட்சம் பேர் பட்டினிச் சாவையும் எதிர் நோக்கியிருக்கும் இன்னேரத்தில் ஒரு தேசம் யுத்தத்தை நோக்கி நகர்வது துரதிஸ்டம்தான்.

"யுத்தமில்லாத ஒரு பூமி சத்தமில்லாமல் வேண்டும்"

புத்தம் சரணம் கச்சாமி .











Saturday, December 2, 2006

ஓர் அறிமுகம்!!

தமிழில் எழுத ஒரு சோதனை முயற்சி!!
நண்பர் அருள்குமார் உதவி புரிந்தார். இனி எழுதுவேன்.....