Wednesday, December 13, 2006

ஆபத்திற்க்கு உதவினால் போலீஸ் தொல்லை!!

நான் சிறீலங்காவில் வசிக்கும் காலத்தில் ஒரு முறை கொழும்பிலிருந்து சென்னைக்குப் போயிருந்தேன். நானும் எனது நண்பரொருவரும் (நண்பர் சென்னையைச் சேர்ந்தவர்) காஞ்சிபுரம் போய் பெரியவரை தரிசித்துவிட்டு அப்படியே அங்குள்ள கோயில்களுக்கும் போய் வர திட்டமிட்டோம். அப்பொழுது எனது நண்பர் "நாம் காரில் போக வேண்டாம், ஆட்டோவில் போவோம் சற்று வேடிக்கையாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்" என்று சொன்னார் (எக்மோரிலிருந்து காஞ்சிபுரம் வரை). நானும் சரி என்று சொல்ல மறுநாள் காலையிலேயே கிளம்பி விட்டோம்.

பாதி தூரத்திற்கு மேல் சென்றதும் வழியில் ஒரு பஸ் ஓரமாக நிறுத்தப் பட்டிருந்தது. பஸ்ஸை சுற்றி ஒரே கூட்டம். என்னவென்று பார்த்தால் ஒரு வயதான பெண்மணி (60 வயதிருக்கும்) ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்கவோ, ஏறவோ முயற்சி செய்யும் பொழுது கீழே விழுந்து பஸ்ஸின் சக்கரங்கள் இரண்டு காலிலும் ஏறிவிட்டது. முழங்காலுக்கு கீழே இரண்டு கால்களும் சிதைந்து போயிருந்தது.
அந்தப்பெண்மணி வலி தாங்காமல் அய்யோ,அய்யோ என்று தரையிலிருந்து கதறிக்கொண்டிருந்தார். சுற்றி நின்று எல்லோரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாரும் உதவி செய்யவோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவோ முயலவில்லை. பஸ்ஸின் ஓட்டுனரையும், நடத்துனரையும் காணவில்லை.

யுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாட்டிலிருந்துசென்ற எனக்கே திகீரென்று ஆகிவிட்டது. கூட்டத்தில் ஒருவர் " இது பொலிஸ் கேஸ் யாரும் தொடாதீர்கள்" என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கோ அந்தப் பெண்மணி படும் வேதனையை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. நான் எனது நண்பரிடம் " வாருங்கள் நாம் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்து விடுவோம் என்று கூறினேன். நண்பர் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சரசரவென கூட்டத்திற்கு வெளியே இழுத்துச்சென்றார். "டேய் சும்மாயிரு, ஒனக்கு இங்க விபரம் போதாது. ஹாஸ்பிட்டலுக்குப் போனா போலீஸுக்கு சொல்லுவாங்க. போலீஸ் எல்லாரையும் கிண்டி கொடஞ்சிருவாங்க. அப்பறம் சாட்சி, கோர்ட், கேஸ்னு திரிய வேண்டியதுதான். அதவிட நீ சிறீலங்காவில இருந்து வந்து இருக்கிற, போலீஸ் உன்ன விடுதலைப்புலின்னு கொண்டு போயிருவான். உன்னோட சேர்த்து என்னையும் உனக்கு உதவி செய்ததா கொண்டு போயிருவான். அப்புறம் நீ சிறீலங்காவுக்கு மட்டுமல்ல இங்க ஜெயில விட்டே போக முடியாது" என்றார்.

அவரோடு சேர்ந்து கொண்டு ஆட்டோகாராரும் " ஆமா சார், விடுதலைப்புலிகளுக்கு உதவி பண்ணினேன்னு என்னையும் கொண்டு போயிருவாங்க, ஆட்டோவையும் பறிச்சுருவாங்க. வேண்டாம் சார் வாங்க போகலாம் " என்றார்.

அதற்கு நான் சொன்னேன் " அப்ப நான் இங்கேயே இருக்கிறேன், நீங்க இரண்டு பேரும் ஹாஸ்பிட்டலுக்கு போங்க" என்றதும், எனது நண்பர் " டேய் நான் நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? போலீஸுக்கு போனா நான்தான் பஸ்ஸ அந்த அம்மா மேல ஏத்தின மாதிரி கேள்வி கேட்பாங்க, எனக்கு இது தேவையா" என்றார். ஆட்டோகாரரும் அதை ஆமோதித்தார்.
நான் "அப்ப அந்த அம்மாவின் நிலை" என்றதும் "அந்த அம்மாவின் தலையெழுத்துப்படி நடக்கும்" என்றார் ஆட்டோக்காரர்.

இதில் மோசமாக மனதைப் பாதித்த விடயம் என்னவென்றால் கூட்டத்திலேயே இன்னொருவர் "இந்த கெழவி பொழைக்காது" என்று அந்த பெண்மணி முன்னாலேயே கூறியதுதான்.

நான் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் இருவரும் என்னை விடவில்லை. அதன் பிறகு கோயிலுக்கு, மடத்திற்க்கு எல்லாம் சென்றும் எனது மனம் ஆறவில்லை. திரும்பி வரும் வழியில் ஆட்டோகாரர் அந்த இடத்தில் நிறுத்தி விசாரித்தார். பொலிஸார் வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும், அந்த பெண்மணிக்கு நினைவு இருந்ததாகவும் அங்குள்ளோர் கூறினார்கள்.

வெகுகாலம் அந்த சம்பவம் என் மனதை உறுத்திக்கொண்டிருந்தது.

உதவி செய்ய வேண்டுமென்ற மனப்பான்மை எலலோருக்குமே இருக்கிறது. ஆனால் போலீஸாரின் கெடுபிடிகளுக்கு பயந்து யாரும் உதவ முன் வருவதில்லை.

பொதுமக்களுக்கு உதவுவதற்காகத்தான் போலீஸ். அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் இவர்கள் ஒரு மனிதாபிமான அடிப்படையில் ஒருவர் உதவுவதற்க்கு தடையாக இருக்கக்கூடாது. யுத்த பூமியாக இருந்தாலும் சிறீலங்காவில் இப்படிக் கிடையாது. உதவுபவர்களை பொலிஸார் தொந்தரவு செய்வது இல்லை. (இப்பொழுது எப்படியோ தெரியாது)
இதில் வேடிக்கையான விடயம், நான் விடுதலைப்புலியல்ல. சிறீலங்காவில் வசிக்கும் இந்திய வம்சாவழித் தமிழன். எனது அப்பா, பாட்டா, தாத்தா எல்லோரும் இந்தியாவில் பிறந்தவர்கள். ஆனால் போலீஸாரைப் பொறுத்தவரை சிறீலங்காவில் பிறந்த எல்லோருமே விடுதலைப்புலிகள் தான்.

போலீஸாசார் தங்கள் போக்கை மாற்றாதவரை "காவல் துறை உங்கள் நண்பன்" என்பது வெறும் வாசகம்தான்.

5 comments:

Anonymous said...

// காஞ்சிபுரம் போய் பெரியவரை தரிசித்துவிட்டு //

அடப்பாவிங்களா, இன்னுமாய்யா நம்புறீங்க?

சொல்ல வந்தது நல்ல செய்திதான். ஆனா மேல உள்ளத ஜீரணிக்க முடியல

ஆதிபகவன் said...

இது நடந்து ஒரு 10 வருசம் இருக்கும்.
பெரியவர் உயிரோட இருந்த காலத்தில பார்க்கப் போனேன்.

Anonymous said...

போலீஸ்ஸோட உங்க ப்ரண்டுக்கு நல்ல அனுபவம் இருக்கும் போல:)))

ஆதிபகவன் said...

என் ப்ரண்டுக்கு மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் நிறைய பேருக்கு போலீஸ்கிட்ட இப்படிப்பட்ட அனுபவம் கிடைச்சிருக்கு.

Jackiesekar said...

நன்றி ஆதி, என்ன செய்ய 400 வருடங்கள் பெரிய பிரச்சனைகள் இன்றி தமிழ் நாட்டு மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் எனது வீட்டு மேல் பாம் போடுவார்கள் என்று இலங்கை தமிழர்கள் போல் பயம் இருந்தால் உதவி செய்யும் மனம் வரும் அதுவரை...?