Tuesday, February 20, 2007

மீண்டுமொரு பேரழிவுக்கு உலகம் தயாராகிறதா ??

இன்னொரு ஊழிக்கு தயாராகிறதா பூமி?

தயவு செய்து முழுமையாக வாசியுங்கள்.

மலட்டுக்கோள்களுக்கு நடுவே பெறுவதற்கரிய மக்கட்பேற்றைப் பெற்றிருக்கும் ஒரே கிரகம் நமது பூமித்தாய் மாத்திரம்தான். ஆனால் தன் மடி நிறைய உயிரினங்களைத் தாலாட்டும் பூமி இப்போது தனது உயிர்வளத்தைக் காவு கொடுக்கும் கால ஊழிக்குள் வேகமாக பிரவேசிக்க தொடங்கியுள்ளாள். என்று உயிரியலாளர்கள் சமீபகாலமாகக் குரல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

பூமி தன் மீது உயிர்ப்பசையைப் பூசி ஏறத்தாழ 3.5 பில்லியன் வருடங்கள் ஆகின்றன. இந்த நீண்ட உயிர்வரலாற்றில் இது வரையில் பூமி ஆறு பேரழிவுகளை சந்தித்திருக்கின்றது. இதில் கடைசியாக நிகழ்ந்த ,இப்போதும் அதிகம் பேசப்படும் ஊழித்தாண்டவம் 65 மில்லியன் வருடங்களுக்கு முன்னாள் அரங்கேறியது. கிறித்தேசியஸ் யுகத்தின் (Cretaceous Era) கடைசிக் காலத்தில் நிகழ்ந்த இந்தப் பிரளயத்தின் போதே அன்று பூமியில் இராஜங்கம் நடத்தி வந்த டைனோசர் இனங்கள் அடியோடு அழிந்தன. அண்ட வெளியில் இருந்து வந்த இராட்சத விண்கற்கள் பூமியை மோதி வெடித்ததால் கிளம்பிய தூசி மண்டலம் சூரியனை மறைத்ததில் சக்திப்பாய்ச்சல் தடைப்பட்டு ...பூமி குளிர்ந்து...இனங்கள் இனங்களாகப் பெரும் எண்ணிக்கையில் தாவரங்களும் விலங்குகளும் செத்து மடிந்தன என்று இந்த ஊழிமரணங்களுக்குப் புதைப்படிவ ஆய்வாளர்கள் விளங்கம் கொடுத்திருக்கிறார்கள்.

அதிர்ஷ்டவசமாக இந்தப் பேரழிவுகளிலும் பூமி தன் தாய்மையைப் பேணியே வந்திருக்கிறது. தப்பிப் பிழைத்த உதிரி உயிரிகளில் மெல்ல மெல்லப் பரிமாணம் (Evolution) நிகழ்ந்ததில் இலட்சக்கணக்கான ஆண்டுகளில் பூமி, மீண்டும் புதிய புதிய உயிரினங்களால் அழகு பெற்றது. நகருயிர்களின் தலைவன் டைனோசோர்களின் அழிவுக்குப் பிறகு பாலூட்டிகள் ஆட்சி பெற்றிருக்கும் இன்றைய பூமியில் இதுவரையில் சுமார் 17 இலட்சம் தாவர - விலங்கு இனங்கள் பெயரிடப்பட்டுள்ளன. ஆனால், இருப்பதில் பெரியதும் அதிக அளவில் ஆராய்ப்பட்டதுமான பாலூட்டிகளே கூட இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை. சமீபத்தில் வியட்நாம் லாவோஸ் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் பசுவை ஒத்த புதிய இனப்பாலூட்டி விலங்கொன்று கண்டறியப்பட்டுள்ளது. பூச்சிகளில் இது வரையிலும் அறியப்பட்ட சுமார் 10 இலட்சம் இனங்களைவிடவும் 8 மடங்கு அதிகமான இனங்கள் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இப்படி,இன்னமும் பெயரிடப்படவேண்டிய, தெரியவர வேண்டிய 125 இலட்சம் வரையான இனங்களைப் பூமி அடர்காடுகளிலும், ஆழ்கடல்களிலும் பொத்திவைத்திருப்பதாக உயிரியல் விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். விலைமதிக்க முடியாத இந்த "உயிர்ப் புதையலே " இப்போது பேரழிவின் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் இருப்பதாக அஞ்சப்படுகிறது.

உண்மையில் , உயிர்கோளத்தை அழிவின் வாயில் இருந்தும் மீட்டெடுப்பது என்பது கைமீறிப்போகும் தருணத்தில்தான் இருக்கிறது. இந்தக் கட்டுரை வெளியாகி இருக்கும் இதழைப் பூரணமாகப் படித்து முடிப்பதற்குள் உலகில் ஏதாவது ஓர் இனம் பரிதாபமாகத் தன் கதையை முடித்திருக்கும் . மணித்தியாலத்துக்கு ஓர் இனம் என்ற கதியில் பூமி தன் உயிர்ப்பைப் பறி கொடுத்துக் கொண்டிருக்கிறது.இது எச்சரிப்பதற்கான மிகைப்படுத்தல் அல்ல. பல தசாப்தங்களாக உயிரியலாளர்கள் இருண்ட காடுகளின் "இண்டு இடுக்கு " களிலெல்லாங்கூட திரட்டிய தகவல்களின் முடிவாகவே இந்தப் பதைக்க வைக்கும் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த உயிரினங்கள் எதுவும் திடீரென ஒரே நாளிற் காணாமற் போய்விடுவதில்லை. எண்ணிக்கையில் படிப்படியாகக் குறையத் தொடங்கி ஒரு நிலையில் ,அழிவில் இருந்தும் இனிமேலும் தானாக மீள முடியாது என்னும் அளவுக்கு "அபாய எல்லை" க்குள் இறங்கிவிடுகிறது. இப்படித் பத்து வருடங்களில் பாதிக்குக் கீழாகவும் அழிந்து விடும் இனங்களை அல்லது வீரியத்துடன் இனம்பெருக்கக்கூடிய அங்கத்தவர்களை 250 இக்கும் குறைவாகக் கொண்டிருக்கும் இனங்களை "அழியும் இனங்கள்" (Endangered) என்று உயிரியலாளர்கள் வரையறை செய்திருக்கிறார்கள். அழியும் இனங்கள் விரைவில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குச் சுருங்கி "வாழும் மரணம்" (Living dead) என்றாகி, கடைசியில் காப்பகங்களிற் கூட ஒரு பிரதிநிதியேனும் விட்டு வைக்காமல் "டோடோ" பறவையைப் போன்றோ அல்லது "பயணிப்புறா" வைப் போன்றோ கூண்டோடு அழிந்து( Extinct) விடுகின்றன.

பூமியில் இருந்து நிரத்தரமாகவே விடைபெறுவதற்குக் காத்திருக்கும் அழியும் உயிரினங்களில் சீனாவின் பண்டா கரடி , ஆபிரிக்காவின் மலைக்கொரில்லாக்கள் , இந்தியப் புலிகள் . நீலத் திமிங்கலங்கள் என்று நட்சத்திர அந்தஸ்துப் பெற்றிருக்கும் வெகு சில இனங்கள் மட்டுமே ஊடகங்களின் கவனிப்புக்கு ஆளாகிவருகின்றன. ஆனால் ஈனஸ்வரம் எழுப்பிக்கொண்டிருக்கும் இனங்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு செல்கிறது. உலக நிலை காப்பு ஒன்றியத்தின் (The world conservation union) மதிப்பீட்டின் படி பாலூட்டும் இனங்களில் நாலில் ஒரு பங்கும் , பறவைகளில் பத்தில் ஒரு பங்கும் அழியக் கூடிய அபாய நிலையை எட்டியுள்ளன. ஊர்வனவற்றில் ஐந்தில் ஒரு பங்கும் ,நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய தவளை தேரை போன்றவற்றில் நாலில் ஒரு பங்கும் , எல்லா வகை மீன்களிலும் குறிப்பாக நல்ல தண்ணீரில் வாழ்பவை 34 விழுக்காடும் அதே போன்று அழிவின் விளிம்பில் வந்து நிற்கின்றன. இந்த விபரங்கள் எல்லாம் நன்றாக நமக்குத் தெரிந்த முள்ளந்தண்டு உயிரினங்கள் பற்றியவைதான். இன்னும் போதுமான ஆய்வுகள் செய்யப்படாத குழுக்களில் 500 வகைப் பூச்சிகள் , 400 வரையான நண்டு போன்ற மேலோடு உள்ள பிராணிகள் , 900 வகை நத்தை, சிப்பி போன்றவைகள் குறித்தும் அச்சம் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று பூமிக்குப் பசுமைப் போர்வையை வழங்கிக் கொண்டிருக்கும் பூக்கும் தாவரங்களிலும் சுமார் எட்டில் ஒரு பங்கு அழிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், பூமிக்கோள் எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கும் இந்த ஏழாவது பேரூழிக்கான கால்கோள் கடந்த யுகங்களைப் போல அண்ட வெளியில் இருந்து வரவில்லை. இம்முறை பூமியின் பிந்திய பிரசவிப்பான மனிதனே பூமித்தாயின் உயிர்த்துகிலை உரியும் அவலம் நேர்ந்திருக்கிறது. விண்ணில் இருந்து பூமிக்கு வரக் கூடிய அபாயங்களை விண்ணிலேயே எதிர்கொண்டு அழிப்பதற்கு மனிதன் தயாராகிவிட்டிருக்கும் இன்றைய நிலையில் ஆபத்து அவனாலேயே என்பது முரண் நகையாக இருப்பினும் யதார்த்தம் அதுவாகத்தான் உள்ளது.

உயிர்வாழ்தலில் "உண்ணுவதும் உணவாவதும் ", " வலிந்தவை பிழைப்பதும் நலிந்தவை அழிவதும்" இயற்கையின் நியதிகளாகும் போது பரிணாமப் பாதையெங்கும் இனங்களின் மறைவும் தவிர்க்க முடியாததாகிறது. புவிச் சரிதவியற் காலம் நெடுகிலும் இனங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக ஒரு மில்லியன் வருடங்கள் வரை வாழ்ந்துள்ளன. இவற்றில் " ஒரு வருடத்துக்கு மில்லியனில் ஓர் இனம் "(Special/ million / year) என்ற கதியில் இயற்கை களையெடுப்பு நிகழ்த்தி வந்துள்ளது. கூடவே, இதே கதியிலேயே பரிணாமத்தில் புதிய இனங்களையும் பிரசவித்து வந்துள்ளது. ஆனால் , " "பழையன கழிதலும் புதியன புகுதலிலும்" பருமட்டாகவேனும் ஒரு சமநிலையைப் பேணி வந்த பூமியில் மனிதனின் வருகைக்குப் பின்னரேயே நிலைமை எதிர்மாறாகியது. இனங்களின் அழிவு வீதம் படிப்படியாக அதிகரித்து இப்போது பெரும் சூறையாடலைப்போல 1000 மடங்குகளாக எகிறியிருப்பதுடன் , புதிய உயிரினங்கள் தோன்றும் வீதமும் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தரையில் வாழும் வேறு எந்தப் பெரிய விலங்கைவிடவும் மனிதர்கள் தான் நூறு மடங்கு அதிகமாகக் காணப்படுகின்றார்கள் சுமார் 600 கோடிகள் . ஒரு பெரு வெடிப்பாக நிகழ்த்திருக்கும் இந்தச் சனத்தொகைப் பெருக்கமே இது வரை இல்லாத அளவுக்கு உயிரினப் பல்வகைமையைக் காயப்படுத்தியுள்ளது. தனி ஒரு மனித இனத்தின் தேவைகளுக்கு இன்னும் சொல்லப்போனால் அவனது பேராசைமிக்க விரய நுகர்வுக்கு உலகின் ஒட்டுமொத்த உயிரினப்பல்வகைமையுமே பலிக்கடாவாகியுள்ளது.

உயிரினப் பல்வகைமை (Bio diversity ) என்னும் சொற்றொடர் 1980 களில் அமெரிக்க அறிவியலாளர்களினால் உருவாக்கப்பட்டது. வெளிப்படையான தொனிப்பை விட இது அர்த்தப் பரிமாணங்களில் இன்னும் ஆழம் நிறைந்தது. மழைக்காடுகள் பவளப்பாறைகள் - சதுப்பு நிலங்கள்- சவான்னாப் புல்வெளிகள்- கடல் நீரேரிகள் என்று பூமியின் பல்வகைப் பட்ட சூழற்தொகுதிகளையும்,இவற்றின் கூறுகளாக இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு தூங்கு மூஞ்சிமரம்- புள்ளி மான்- வௌவால் மீன் - பறக்கும் அணில்-பாண் பூஞ்சணம் என்று பல தரப்பட்ட இனங்களையும் குறிக்கிறது. தவிரவும் , இனங்களுக்கிடையேயான பல் வகைமையைப் போல் இனத்துக்குள்ளேயும் உண்டு. உருளைக்கிழக்கில் சுமார் 3000 வகைகள் தென் அமெரிக்காவின் ஆண்டீஸ் மலைப்பகுதியில் பயிராகிறது.சேலம்,கிளிச்சொண்டு, அம்பலவி, அல்போன்சா என்று மா இனத்தில் சுமார் 1000 இனங்கள் உண்டு. இப்படி ஓர் இனத்தின் அங்கத்தவர்களுக்கிடையே இருக்ககூடிய மாறுபாடுகளுக்குக் காரணமான மரபணுக்களையும் சேர்த்தே உயிரினப் பல்வகைமை முழுமை பெறுகிறது. சூழற்தொகுதிகள் இனங்கள் -மரபணுக்கள் என்று உயிரனப் பல்வகைமையின் எல்லாப் படிகளிலுமே இன்று மனிதனின் பிடி அகோரமாக இறுக்கத்தொடக்கியுள்ளது.

சூழற்தொகுதிகளில் முதலிலும், அதிக அளவிலும் பாதிப்புக்கு ஆளாகியது பூமியின் உயிர்நாடியாக விளங்கும் மழைக்காடுகள் ( Rain forests) தான். பூமத்தியரேகையை ஒட்டி வெப்பமண்டல நாடுகளில் வானளாவி நிற்கும் இந்தப் பச்சை அடுக்கு வீடுகளில் தான் உலகின் அரைவாசி உயிரினங்கள் வாசம் செய்கின்றன. அதுவும் ,இவற்றில் பெரும்பாலானாவை தாம் வாழும் குறிப்பிட்ட அந்தப் பிரதேசங்களைத் தவிர வேறு எந்தப் பகுதிகளிலும் காணப்படாத இனங்கள் (Endemic) ஆகும். தான் கொண்டிருக்கும் உயிரினங்களோடு உலகின் மீதி உயிரினங்களின் இருத்தலிலும் பங்காற்றிக்கொண்டிருக்கும் மழைக்காடுகள். வேளாண் தேவைகளுக்கும் , நகரமயமாக்கலுக்கெனவும் பெரும் அளவில் சூறையாடப்படுகின்றன. நூறு வருடங்களுக்கு முன்னாள் பூமியின் நிலப் பரப்பில் 12 விழுக்காடுகளாக இருந்த மழைக்காடுகள் இப்போது சரி பாதியளவே எஞ்சியுள்ளன. நூலிழையில் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்தக் காட்டுத் துகிலும் செக்கனுக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் ( வருடத்துக்கு இங்கிலாந்தும் வேல்ஸூம் இணைந்த பரப்பளவால்) துச்சாதன மனிதனிடம் தன்னை இழந்து கொண்டிருக்கிறது.

பெரும் எண்ணிக்கையான இனங்களுக்குப் புகலிடம் அளிப்பதால் `கடலின் மழைக்காடுகள் " என்று வர்ணிக்கப்படும் "பவளப் பாறைகளும்" (Coral reefs) பாரிய அழிவைச் சந்திக்கத் தொடந்கியுள்ளன. வெப்ப வலயக் கடலின் ஆழம் குறைந்த கரையோரப் பகுதிகளில் மைல் கணக்காகப் படுத்துக் கிடக்கும் பவளப் பாறைகள் , நட்சத்திர மீன், கடல் அனிமனி, கடற் பஞ்சு என்று கடலின் இரண்டு மில்லியன் இனங்களுக்கு இனிய இல்லங்களாக விளங்குகின்றன. கடல் மீன் இனங்களிலும் கால்வாசிப் பங்கு இங்கு சஞ்சாரம் செய்கின்றன. பவளப்பாறைகள் ஜெலிமீன்களின் கூட்டத்தை சேர்ந்தவை. கல்சியம் காபனேற்றுச் சுவர் சூழ்ந்த ,இடம் பெயரமுடியாத முடவன் உயிரிகள் ஆகும். இதனால் அல்காக்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவற்றை தம்மில் வளர இடம்கொடுத்து அவற்றிடம் இருந்து உணவை பெற்று ஏறத்தாழ 195 மில்லியன் வருடங்களாகப் பூமியில் நிலை கொண்டிருக்கின்றன. ஆனால் கிறித்தேசியஸ் யுக ஊழியைக்கூடத் தாக்குப்பிடித்த இந்தப் பவளப்பாறை இனங்களினால் மனிதனின் சூழல் விரோதப் போக்குகளிலிருந்துமட்டும் தப்பிக்க முடியவில்லை. ஏற்கனவே கடலில் கலக்கும் கழிவுகள் , டைனமைற் வெடிகள் சயனைட் நஞ்சுகளைப் பயன்படுத்தும் மீன்பிடி முறைகள் ,அளவுக்கு அதிகமான மீன்பிடி , நங்கூரங்களின் காயப்படுத்தகள், கப்பற் போக்குவரத்துக்குத் தகர்க்கப்படும் நிர்ப்பந்தம் போன்றவற்றால் அவதிக்குள்ளாகி வந்த பவளப்பாறைகள் இப்போது பூமி சூடாகத் தொடங்கியதையடுத்து மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. மனிதன் மேற்கொண்டு வரும் காடழிப்பினாலும் , அவன் கரித்துக் தள்ளும் எரிபொருட்களினாலும் குவியும் கரியமில வாயு பூமியை சூடுபடுத்தி (Global warmimg) வருகிறது. இதில் கடல் நீரின் வெப்பநிலை உயர்ந்து அல்காக்களை அழித்துவிட , பவளப்பாறைகள் உணவூட்டல் இன்றி நிராதரவாக மடிய ஆரம்பித்துள்ளன. இதுவரையில் இந்து சமுத்திரப் பரப்பில் மட்டுமே ஐம்பது விழுக்காடுகளுக்கும் அதிகமான பவளப்பாறைகள் இப்படி அழி பட்டிருக்கின்றன.

ஆண்டொன்றுக்கு வெறும் 10 சத மீற்றர் அளவால் மட்டுமே வளரக்கூடிய பவளப் பாறைகளால் இப்பேரழிவிலிருந்தும் மீண்டெழுவது என்பது இயலாத ஒன்றாகும். இந்தக் கடற்காடுகளின் அழிவும் தரையில் மழைக்காடுகளின் மறைவும் இப்போதுள்ள கதியிலேயே தொடருமாயின் 2,100 ஆம் ஆண்டளவில் உலகின் உயிரினங்களில் பாதியளவு பூமியில் இருந்து நிரந்தரமாகவே காணமற்போய்விட்டிருக்கும்.

(நன்றி: தினக்குரல்)

Saturday, February 17, 2007

கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா? (பாகம் 2)

கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா?

கனடா ஒவ்வொரு வருடமும் மூன்று விதமான குடிவரவாளர்களை உள்வாங்குகிறது.
அவை:

Economic Class
Family Class
Refugees

இந்த மூன்று பிரிவுகளின் கீழும் பல்வேறு பிரிவுகள் உண்டு.

இவற்றில் எதன் கீழ் நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களோ அதன் அடிப்படையிலேயே உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்துடன் இணைக்குமாறு கேட்கப்பட்டிருந்த அனைத்துப் பத்திரங்களின் நம்பகத்தன்மையும் மூலப்பிரதிதானா என்பதும் (Credibility & Authenticity) கனேடிய தூதரகத்தாலும் RCMP எனப்படும் கனேடிய பொலிசாராலும் பரிசோதிக்கப்படும். ஆகையால் போலிப் பத்திரங்களை கொடுத்து விண்ணப்பிப்பது சாத்தியமில்லை. ஒரு சிறிய சந்தேகம் வந்தாலும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதன் பிறகு எல்லாமே கடினமாகிவிடும்.

மிக முக்கியமான ஒன்று தொழில் வாய்ப்புக்கள்.

மற்றைய நாடுகளின், கம்ப்பியூட்டர்துறை தவிர்ந்த எந்த ஒரு டிகிரியையும் இவர்கள் கணக்கிலெடுப்பதில்லை. கம்ப்பியூட்டர் துறையிலும்கூட அவர்கள் உங்கள் டிகிரியைப் பார்ப்பதில்லை. அவர்கள் சொல்லும் வேலையை உங்களுக்கு செய்யத் தெரிந்தால் சரி.

மருத்துவத்துறையிலோ, வணிகத்துறையிலோ அல்லது வேறு எந்த துறையில் நீங்கள் பட்டம் பெற்று வல்லவராயிருந்தாலும் மீண்டும் இங்கு இவர்களின் சட்டதிட்டங்களுக்கமைய படித்து பரீட்சையில் தேர்ச்சி பெறவேண்டும். இல்லாவிட்டால் உங்கள் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் போகலாம்.உங்கள் நாட்டு டிகிரிக்கு ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்கள் தருவார்கள்.

டாக்டராக வந்து இங்கே ரெஸ்டாரண்டில் வேலை செய்பவர்களெல்லாம் உண்டு.

உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலித்து குடியேற அனுமதித்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். இங்கு வந்த உடன் என்ன செய்யப் போகிறீர்கள் என்று யோசித்து வைத்திருங்கள்.

வீடு அல்லது அப்பார்ட்மெண்ட் வாடகை, போக்குவரத்து செலவு, மருத்துவச்செலவு மற்றும் உங்கள் படிப்பிற்கேற்ற வேலை தேடுவது என நிறைய உண்டு. ஆரம்பத்தில் காலநிலை வேறு ஒத்துக்கொள்ளாது. வீட்டு வேலைக்கு எல்லாம் ஆள் கிடைக்காது.

குறைந்தது உங்கள் ஆறுமாத செலவுகளுக்கான பணத்தை நீங்கள் இங்கு வரும்போது விமான நிலையத்தில் காட்டவேண்டி வரலாம்.

12ம் வகுப்பு வரை கல்வியும் எல்லோருக்கும் மருத்துவமும் இலவசம். ஆனால் முதல் 3 மாதங்களுக்கு மருத்துவச்செலவை நீங்களேதான் கவனித்துக் கொள்ளவேண்டும். வாகனமோட்ட உடனே அனுமதிப்பத்திரம் கிடைக்காது. குறைந்தது 8 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டி வரலாம். அது உங்கள் சொந்த நாட்டில் நீங்கள் வைத்திருந்த அனுமதிபத்திரத்தைப் பொறுத்தது. மோட்டார்சைக்கிள் அனுமதிப்பத்திரம் எடுப்பதுதான் மிகக்கடினம்.

இனி கனேடிய நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா, எத்தனை புள்ளிகள் தேவை, எங்கே விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது மற்றும் அனைத்து விபரங்களுக்கும் கீழே உள்ள கனேடிய குடிவரவுத்துறை இணையத்தளத்திற்க்குச் சென்று அறிந்து கொள்ளுங்கள். நீங்களாகவே விண்ணப்பிக்கலாம். உங்கள் கேள்விகள் அனைத்திற்க்கும் இத்தளத்தில் பதிலுண்டு.

நீங்கள் எந்த தேசத்தில் இருந்து வந்தவராயிருந்தாலும் சரி எந்த மதத்தை சார்ந்தவராயிருந்தாலும் சரி உங்கள் சொந்த நாட்டில் வாழ்ந்தது போன்றே இங்கு வாழலாம். அரச, தனியார் வேலை வாய்ப்பு விளம்பரங்கள் எதிலும் ஆண்கள், பெண்கள் என்றோ இத்தனை வயதுக்குள் என்றோ விண்ணப்பங்கள் கோர முடியாது. இருபாலாரும் சமம். 18 வதுக்கு மேல் சட்டபூர்வமாக வேலை செய்யக்கூடிய யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம், தகுதி இருந்தால்.


கனேடிய வாழ்க்கையின் சற்றே கடினமான பகுதிகளைத்தான் நான் இங்கு கோடிட்டு காட்டியிருக்கின்றேன். அதே கனேடிய வாழ்க்கையின் சந்தோஷமான பகுதிகள் நிறையவே உண்டு. அவற்றை இங்கு வந்து பாருங்கள், அனுபவியுங்கள்.

கனடா ஒரு அற்புதமான தேசம். தனிமனித சுதந்திரத்தில் அதிக அக்கறை கொண்ட நாடு. திட்டமிட்டு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்களேயானால் இது ஒரு சொர்க்கம். உங்களுக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல உங்கள் வருங்கால சந்ததியினருக்கும்.

அனைத்து விபரங்களையும் இவ்வலைப்பக்கத்தில் கொண்டுவருவது சிரமமான விடயம். இந்த இணையத்தளம் ஒரு சரியான வழிகாட்டி.



கனேடிய குடிவரவுத்துறை இணையத்தள முகவரி:

www.cic.gc.ca

கனடாவைப்பற்றிய மேலதிக விபரங்களுக்கு:

http://canada.gc.ca/acanada/acPubHome.jsp?land=eng


உங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.

கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா?

அண்மையில் பத்திரிக்கை ஒன்றில் கனடாவில் நிரந்தரமாக குடியேற உதவி செய்வதாக ஒரு விளம்பரத்தைக் கண்டேன். அதில் உள்ள சில தில்லு முல்லுகளைப் பற்றி தெரியவந்ததால் இந்தப்பதிவு.


கனடாவில் குடியேற விரும்புகிறீர்களா?

நீங்கள் கனடாவில் குடியேற நாம் உதவி செய்கிறோம். பல வருட அனுபவம் கொண்ட நாங்கள் எத்தனையோ பேருக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை வாங்கித் தந்திருக்கிறோம். உடனே எம்மை அணுகுங்கள் என பத்திரிக்கைகளில், தொலைக்காட்சியில் இன்னும் எத்தனையோ விதமான
விளம்பரங்களை நீங்கள் அவதானித்திருக்கக் கூடும்.

அவ்விளம்பரங்கள் சொல்வதைப் பார்த்தால் கனேடிய குடிவரவுத்துறையில் நேரடி தொடர்பு உள்ளவர்கள் போலவும் நீங்கள் மிக சுலபமாக கனடாவில் குடியேற எல்லாவற்றையும் அவர்களே செய்து தருவார்கள் என்பது போல இருக்கும்.

இவற்றை செய்து தருவதற்க்கு ஒரு கட்டணமும் வைத்திருப்பார்கள். (கட்டணம் ஆயிரக்கணக்கில் அல்லது லட்சக்கணக்கில்).

நம்பிவிடாதீர்கள், அவ்வளவும் ஏமாற்றுவேலை. நம்பி பணத்தைக் கொடுத்தீர்களேயானால் அவ்வளவுதான். அதிகபட்சமாக அவர்கள் செய்வதெல்லாம் உங்கள் விண்ணப்பத்தை முறையாக நிரப்பி அனுப்புவதுதான். அதற்க்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்கத்தேவையில்லை.
அதை நீங்களே செய்யலாம்.

மிக மிக முக்கியமான விடயம், கனடாவில் குடியேற நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்களா என்பதுதான். இல்லை என்றால் குடியேறுவது மிகவும் கடினம்.

அதை எப்படி தெரிந்து கொள்வது? சற்றுப் பொறுங்கள் சொல்கிறேன்.

கனடா ஒரு பல்கலாச்சார (Multi Cultural) நாடு. கிட்டத்தட்ட 130 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு குடியேறியிருக்கிறார்கள். கனடா முற்றுமுழுதாக குடிவரவாளர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடு.

இங்கு லஞ்சம் இல்லை என்றே கூறலாம் (ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள் இருக்கலாம். முன்னைய அரசின் மீது மிகப் பெரிய ஊழல் குற்றச்சாட்டும் உண்டு).

இங்கு அமைச்சர்களைவிட அந்த அமைச்சின் அதிகாரிகளுக்கே அதிக அதிகாரமுண்டு. அவசியமிருந்தாலே தவிர தனது அமைச்சின் கீழ் வேலை செய்யும் அதிகாரிகளின் செயற்பாட்டில் அமைச்சர் குறுக்கிட முடியாது. (ஒரு முறை ஒரு குடிவரவாளரின் விண்ணப்பத்தை சீக்கிரம் பரிசீலிக்கச் சொல்லி கடிதமெழுதியதற்காக பதவியை இழந்த அமைச்சரும் உண்டு.)


எங்கள் மூலமாக விண்ணப்பித்தால் மிக இலகுவாக நிரந்தரகுடியுரிமை கிடைக்க வழியுண்டு, ஆகையால் குடிவரவுத்துறையில் சொல்லி உங்கள் விண்ணப்பத்தை சீக்கிரம் பரிசீலிக்கச் சொல்கிறேன் என்பதெல்லாம் மிகப் பெரிய பொய்.


கனடாவின் மொத்த நிலப்பரப்பு - 9984670 சதுர கி.மீ (இந்தியாவைவிட 3 மடங்கு பெரியது)
கனடாவின் மொத்த ஜனத்தொகை - 33,098,932 (2006)
இந்தியாவின் ஜனத்தொகை 1,095,351,995 (July 2006) கனடாவைவிட 33 மடங்கு அதிகம்.

மொத்த ஜனத்தொகையில் 1% குடிவரவாளர்களை ஒவ்வொரு வருடமும் குடியேற அனுமதிக்கும் திட்டத்தை கனடா கொண்டிருக்கிறது. (கிட்டத்தட்ட 3 லட்சம் பேர்). ஆனால் அத்தொகை எப்பொழுதுமே எட்டப்பட்டதில்லை. 2 லட்சம் தொடக்கம் 2.20 லட்சம் வரையானோரே ஒவ்வொரு வருடமும் இங்கு வருகிறார்கள்.

கனேடிய குடிவரவுச் சட்டம் சற்று கடுமையானது (இலகுவானது எனக்கூறுவோரும் உள்ளனர்).


அடுத்தபதிவில் உங்கள் தகுதி என்ன, எங்கே விண்ணப்பிப்பது போன்ற மற்றைய விபரங்களை எழுதுகிறேன்.